'அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர், தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப
Nicole Brockbank | CBC News | Posted: April 18, 2018 2:33 PM | Last Updated: April 18, 2018
2015 இறுதிப்பகுதியில் 37 வயதான கிருஷ்ண குமார் கனகரத்தினம் கொல்லப்பட்டிருக்கின்றாரென காவல்துறையினர் நம்புகின்றன
This is a Tamil translation of a previous CBC Toronto article on Kirushna Kumar Kanagaratnam. For the English version, click here.
அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், "அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.
37 வயதான கனகரத்தினத்தின் இறப்பு, முன்பே திட்டமிடப்பட்டு வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையென (first-degree murder) புரூஸ் மக்ஆதர் மேல் இன்று காலை குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேறு ஏழு ஆண்களின் இறப்புத் தொடர்பாக, இந்தத் தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப்பதாகக் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்று கொலைகளைச் செய்ததாகக் குற்றங்கள்சுமத்தப்பட்டிருக்கின்றன.
ரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Mallory Crescentஇல், தரைத் தோற்றத்தை அழகுபடுத்துவராக மக்ஆதர் வேலைசெய்த ஒரு வீட்டுத் தோட்டத்தில், பூக்கன்றுகள் நடும் சட்டியொன்றில் (garden planter) கனகரத்தினத்தின் இறந்த உடலைக் கண்டெடுத்ததாக இந்த வழக்கின் முக்கிய புலன்விசாரணையாளரான Det.-Sgt. Hank Idsinga செய்தியாளர் செய்திமாநாடு ஒன்றில் தெரிவித்தார்.
"அவரைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக உள்ளது," என CBC செய்திகளுக்கு, T. பிரணவன் கூறினார். "இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம் அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம்."
2010 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மாதப் பயணத்தின் பின்னர், தாய்லாந்திலிருந்து B.C. கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த, 492 அடைக்கலம் தேடிய இலங்கையர்களில் இருவராக பிரணவனும் கனகரத்தினமும் இருந்தார்கள்.
அந்தப் பயணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல் காரணமாக அகதி அந்தஸ்தைக் கோரினார்கள், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் அவர்களில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.
இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம். - T. பிரணவன்
கனகரத்தினத்தைத் தான் சந்தித்திருந்ததாக CBC செய்திகளுக்குக் கூறிய, அந்தச் சரக்குக் கப்பலில் வந்திருந்தவர்களின் அகதிக் கோரிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வன்கூவர் குடிவரவுச் சட்டத்தரணிகளில் ஒருவரான Gabriel Chand, கனகரத்தினத்தை "நல்ல மனிதர்," எனப் பல தடவைகள் விபரிக்கிறார், ஆனால் கனகரத்தினத்தின் வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.
"மென்மையாகப் பேசும் ஒருவராக அவர் இருந்தார்," என்கிறார் அவர். "ஒப்பீட்டளவில் அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார்." MV Sun Sea கப்பலில் பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகத் தான் அனுதாபப்பட்டதாகக் கூறும் Chand, அதேநேரத்தில், கனகரத்தினத்தின் அனுபவத்தைப் பற்றிக் "குறிப்பாகத்" தான் கவலையடைந்ததை நினைவுகொள்கிறார்.
"அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார், அதன்பின்னர் இப்படியொரு முடிவு அவருக்கு வந்திருப்பது மிகவும் கொடுமையானது", என்றார் அவர்.
கனகரத்தினமும் தானும் தங்களுடைய சகோதரர்களைப் போரில் இழந்திருந்ததாகவும், தங்களுடைய அனுபவங்களைத் தாங்கள் அந்தக் கப்பலில் பகிர்ந்துகொண்டிருந்ததாகவும் பிரணவன் கூறினார். கனடாவுக்கு வந்தபின்னர் தாங்கள் அதிகம் கதைக்கவில்லை என்றும், ஆனால், கனகரத்தினம் பற்றிய Facebook பதிவொன்றைக் கடந்த வருடம் தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
"உறவினர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற படங்களை Facebookஇல் நான் பார்த்தேன், எனவே, அவர் ஒளிந்திருக்கக்கூடுமென எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்", என்கிறார் பிரணவன். "உண்மையிலேயே நான் மிகவும் வருந்துகிறேன்."
கனகரத்தினத்தின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் ஒளிந்திருக்கக் கூடுமென எனத் தான் நினைத்ததாகக் கூறுகிறார் பிரணவன்
காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை
Idsingaஇன் கருத்துப்படி கனகரத்தினத்தை ரொறன்ரோவில் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அத்துடன் அவரின் இறப்புக்கு முதல் அவர் ஸ்காபோரோவில் வாழ்ந்தார்.
2015 செப்ரெம்பர் ஆரம்பப் பகுதிக்கும் டிசம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறையினர் நம்புகின்றனர். Selim Esen, 44, Abdulbasir Faizi, 44, Majeed Kayhan, 58, Andrew Kinsman, 49, Dean Lisowick, 47, Soroush Mahmudi, 50, ஸ்கந்தராஜ் நவரத்தினம், 40 ஆகியோரையும் கொலைசெய்ததாக மக்ஆதர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நிழல்படம் ஒன்றிலிருந்து கனகரத்தினத்தை புலன்விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். வழமைக்கு மாறன ஒரு நடவடிக்கையாக கனகரத்தினத்தின் இறந்த உடலின் படமொன்றைக் காவல்துறையினர் வெளியிட்டனர். அவர் யாரென அறிந்துகொள்வதற்கான "கடைசி நடவடிக்கை" என இதை Idsinga விபரிக்கின்றார்.
மக்ஆதரின் மின்கணினியின், பல தடவைகள் அணுகப்படும் தரவுகளை விரைவில் பெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்திலிருந்து (cache) அந்தப் படம் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் CBC ரொறன்ரோவுக்கு கூறியிருந்தனர். அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கு Idsinga மறுத்துவிட்டார். கடந்த வாரம் அந்த மனிதரை அடையாளம் கண்டுவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். வாரவிடுமுறை நாட்களை குடும்ப நபர்களைத் தொடர்புகொள்வதில் தாங்கள் செலவிட்டதாகவும் அவர்களில் பலர் இந்த நாட்டில் இல்லையெனவும் Idsinga குறிப்பிட்டார்,
மக்ஆதருடன் கனகரத்தினத்துக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும், பலியாக்கப்பட்ட ஏனையவர்களில் அனேகமானவர்களுக்குத் தொடர்பிருக்கும் Gay Village (ஓரினச் சேர்க்கையுள்ளவர்கள் வதியும் இடம்) உடன் அவரைத் தொடர்புபடுத்தும் ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் Idsinga கூறுகிறார்.
"இந்த வழக்குடன் தொடர்பாக நாங்கள் அறிந்திருந்த ஏனையவர்களின் விபரங்களுடன் அவர் சரியாகப் பொருந்தவில்லை," என்றார் Idsinga.
மக்ஆதரை எப்படிக் கனகரத்தினம் சந்தித்திருப்பார் என்பது பற்றி அவருக்கு "எதுவும் தெரியாது" எனினும், MV Sun Seaஇல் கனடாவுக்கு வந்தவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமாகவிருந்தது என்று CBC செய்திகளுக்குப் பிரணவன் கூறினார்.
"கனடாவுக்குள் நுழைந்தபோது எங்களுக்கொரு பிரகாசமான எதிர்காலத்தைக் கனடா தருமென நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நேரத்தில் கனடா எங்களைப் பெரிதாக வரவேற்கவில்லை. அதைப் பற்றி உண்மையிலேயே நாங்கள் வருத்தமும் கவலையும் அடைகிறோம்," என்று பிரணவன் கூறினார்.